மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து தாத்தா-பேரன் உள்பட 3 பேர் சாவு
பல்லாரி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் தாத்தா, பேரன் உள்பட 3 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது.
பெங்களூரு,
பல்லாரி (மாவட்டம்) புறநகர் குரலகுந்தா கிராமத்தை சேர்ந்தவர் பம்பாபட்டி (வயது 50). இவரது மகன் மாரப்பா. மாரப்பாவுக்கு திருமணமாகி அகில்(5) என்ற மகன் இருந்தான். நேற்று காலையில் பம்பாபட்டி மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் பேரன் அகிலும் உடன் சென்றான். பல்லாரி புறநகர் பாலாஜிநகர், தாலூர் ரோட்டில் தாத்தாவும், பேரனும் சென்று கொண்டிருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் அதே சாலையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளும், பம்பாபட்டியின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பம்பாபட்டி, சிறுவன் அகில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
3 பேர் சாவு
அதுபோல, மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த தம்பதியும் கீழே விழுந்து உயிருக்கு போராடினார்கள். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பம்பாபட்டி, அவரது பேரன் அகில் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சானால் கிராமத்தை சேர்ந்த நசீர் பாட்ஷா(28) ஆகிய 3 பேரும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
நசீர் பாட்ஷாவின் மனைவி ஆஷாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்லாரி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.