நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி: மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவி?

நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு காங்கிரஸ் மாநில தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2019-06-06 20:50 GMT
பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த ஆண்டு (2018) தேர்தல் நடைபெற்றது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. குமாரசாமி முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த பரமேஸ்வருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் புதிய தலைவராக தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் கர்நாடகத்தில் காங்கிரஸ் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தும் நோக்கத்தில், கட்சியின் மாநில தலைவரை மாற்ற மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மந்திரி டி.கே.சிவக்குமார்

கர்நாடக காங்கிரசில் பலம் வாய்ந்த தலைவர்களில் ஒருவரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு கட்சியின் மாநில தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீலின் பெயரும் அடிபடுகிறது. அவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் மந்திரிகளாக இருப்பதால், கட்சி தலைவர் பதவியை அவர்கள் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்