பவளப்பாறைகளை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பவளப்பாறைகளை பாதுகாக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பனைக்குளம்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் குருசடைதீவு,முயல்தீவு,சிங்கிலிதீவு,அப்பாதீவு,மனோலிதீவு,உப்புதண்ணிதீவு,நல்ல தண்ணீர் தீவு என 21 தீவுகள் உள்ளன.இந்த தீவுகளை சுற்றிலும் கடல்பசு, டால்பின், கடல்ஆமைகள், பல்வேறு நட்சத்திர மீன்கள் மற்றும் அரியவகை பவளப்பாறைகள் என 3,600 வகையான அரிய கடல்வாழ் உயிரினங்கள் அதிகஅளவில் வாழ்ந்து வருகின்றன.இதிலும் குறிப்பாக பாம்பன் அருகே உள்ள குருசடை தீவு கடல் பகுதியை சுற்றிலும் 47 வகையான 100 இனங்களை சேர்ந்த பல்வேறு வண்ணங்களில் அரிய வகையான பவளப்பாறைகள் உள்ளன. பவளப் பாறைகள் உள்ள இடங்களில் கடல்பசு,டால்பின்,பல வகையான மீன்களையும் அதிகஅளவில் காண முடியும்.
இந்தியாவிலேயே அந்தமான்,லட்சத்தீவு ஆகிய பகுதிகளை விட ராமநாதபுரம் மாவட்டத்தின் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தான் அதிகஅளவில் பவளப் பாறைகள் உள்ளன என்பது ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.தீவுப் பகுதிகளை தவிர மண்டபம் வடக்கு கடல் பகுதியான தோணித்துறை கடற்கரை உள்ள கடல் பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பச்சை, சிவப்பு, ஊதா என பல வண்ணங்களில் பல வகையான அரிய வகை பவளப் பாறைகள் உள்ளன. வடக்கு கடல் பகுதியில் உள்ள பவளப்பாறைகள் ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மட்டுமே தெளிவாக வெளியே தெரியும்.மற்ற மாதங்களில் வடக்கு கடல் பகுதியில் கடல் அலைகளின் வேகம் அதிகம் இருப்பதால் கடலில் உள்ள பவளப் பாறைகள் தெளிவாக வெளியே தெரியாது.
ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி இழை பைபர் படகில் சென்று இந்த பவளப் பாறை களை பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனால் பவளப்பாறைகள் உள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் ஒரு சில நாட்டுப்படகு,மற்றும் சிறிய மீன்படி படகில் சென்றும் மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால் வலையில் சிக்கியும், உராய்விலும் அரிய வகை பவளப்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.மேலும் அதிகஅளவில் பவளப்பாறைகள் சேதமாகியும் உள்ளன. அந்த இடங்களில் இரவு நேரங்களில் ஒரு சில நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் வழிதெரியாமல் படகுகளில் சென்று வருவதால் ஏராளமான பவளப் பாறைகள் அழிந்து சேதமாகி வருகின்றன.
எனவே மண்டபம் தோணித்துறை கடல் பகுதியான வடக்கு கடல் பகுதியில் உள்ள அபூர்வ பவளப் பாறைகளை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள்,இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.