மனைவியின் நடத்தையில் சந்தேகம்: மகனை கொன்று விட்டு தையல் தொழிலாளி தற்கொலை
கோவையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, மகனை கொன்றுவிட்டுதையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சரவணம்பட்டி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த சிவானந்தபுரம் 3-வது வீதியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 40), தையல் தொழிலாளி. இவருடைய மனைவி அலமேலு (33). இவர்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் யூகாஸ் (13). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
அர்ஜூனன் வீட்டிலேயே துணி தைக்கும் எந்திரத்தை வைத்து துணிகளை தைத்து கொடுத்து வந்தார். அலமேலு ஆவாரம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
அலமேலு அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்தார். அதிலும் வாட்ஸ்- அப்பில் அடிக்கடி தகவல்களை பரிமாறிக்கொண்டே இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை அர்ஜூனன் தனது மனைவியிடம் செல்போனை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று கூறி உள்ளார்.
அதை கேட்காமல் அவர் அடிக்கடி ஒருவரிடம் வாட்ஸ் - அப்பில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் அர்ஜூனனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அலமேலு இரவு நேரத்தில் நீண்ட நேரமாக வாட்ஸ்- அப்பில் தகவல்களை பரிமாறிக்கொண்டு இருந்தார். இது தொடர்பாக அர்ஜூனன் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் காலையில் அலமேலு வேலைக்கு சென்றுவிட்டார்.
மாலையில் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனே போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு அர்ஜூனனும், அவருடைய மகன் யூகாசும் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் அந்த அறைக்குள் சோதனை செய்த னர். அப்போது ஒரு கடிதம் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனது மனைவி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசி வருகிறார். இதனால் அவருடைய நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்து உள்ளேன். எனது மகனை விட்டுச்செல்ல மனம் இல்லாததால் அவனையும் என்னுடன் அழைத்துச் செல்கிறேன் என்று எழுதப்பட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில், அர்ஜூனன் தனது மகன் மீது அதிகளவு பாசம் வைத்து இருந்தார். அவருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், வாழ பிடிக்க வில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் தனது மகனை விட்டுச்செல்ல அவருக்கு மனம் வரவில்லை.
எனவே அவனையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தேனில் சாணிப்பவுடரை (விஷம்) கலக்கி மகனுக்கு குடிக்க கொடுத்தார். ஆனால் அவன் உடனே சாகவில்லை. வாயில் நுரை தள்ளியபடி மயங்கினான்.
இதையடுத்து மகனை வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் தானும் சாணிப்பவுடரை குடித்துவிட்டு அதே அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மகனை கொன்றுவிட்டு தையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.