மோட்டார் சைக்கிள்கள் மோதல்: விவசாயி பரிதாப சாவு சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்
மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் விவசாயி பரிதாபமாக இறந்தார். சிறுவன் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
பொள்ளாச்சி,
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள விருகல்பட்டிபுதூரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 40), விவசாயி. நெகமம் அருகே உள்ள கப்பளாங்கரையை சேர்ந்தவர் பழனிசாமி (55). இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் கப்பளாங்கரையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ஈஸ்வரன் ஓட்டி சென்றார்.
பல்லடம் ரோடு தொப்பம்பட்டி அருகே சென்ற போது, முன்னால் சென்ற காரை ஈஸ்வரன் முந்த முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டதில் ஈஸ்வரன், பழனிசாமி, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பல்லடத்தை சேர்ந்த சையது இப்ராகிம் (43), அவரது மனைவி நிதியாபேகம் (35), மகன் அப்துல் இஸ்ராக் (13) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி தனி, தனி மோட்டார் சைக்கிள்களில் சையது இப்ராகிம் மற்றும் உறவினர்கள் ஆழியாறுக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.