திருவண்ணாமலை, ஆரணி தபால் நிலையங்களில் தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய இன்று கடைசி நாள்
திருவண்ணாமலை, ஆரணி தபால் நிலையங்களில் தங்க பத்திரம் முதலீடு இன்று வெள்ளிக்கிழமை வரை செய்யலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தெரிவித்து உள்ளார்.
திருவண்ணாமலை,
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா, இந்த நிதியாண்டில் முதலாவது வெளியிடான தங்க பத்திரம் வெளியிட்டு உள்ளது. இதற்கான முதலீட்டை இன்று (வெள்ளிக்கிழமை) வரை செய்யலாம். தங்க பத்திரம் தனி நபர் ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் தொகை 1 கிராமிற்கு ரூ.3,196 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2-வது வெளியிடான தங்க பத்திரம் வருகிற ஜூலை மாதம் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையும், 3-வது வெளியிடான தங்க பத்திரம் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 4-வது வெளியிடான தங்க பத்திரம் வருகிற செப்டம்பர் மாதம் 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரையும் வெளியிட உள்ளது. இவைகளுக்கான தங்கத்தின் விலை அவ்வப்பொழுது தெரியப்படுத்தப்படும்.
பத்திரத்தில் சேருவோருக்கு 8-வது ஆண்டின் முடிவில் அன்றைய தேதியில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறதோ, அதே விலையில் நிர்ணயித்து கொடுக்கப்படும். இடையில் பணம் தேவைப்படுவோர் 5 ஆண்டிற்கு பிறகு பணத்தை பெற்று கொள்ளலாம்.
இதில் முதலீடு செய்யும் தொகைக்கு ஆண்டிற்கு 2.5 சதவீதம் 6 மாதத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டு கூட்டு வட்டியாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் சேருவோர் திருவண்ணாமலை கோட்டத்தில் உள்ள ஆரணி மற்றும் திருவண்ணாமலை தலைமை தபால் நிலையங்களை அணுகி முதலீடு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.