தொரப்பாடியில் ஆழ்துளை கிணற்றில் சுவையான குடிநீர்
வேலூர் தொரப்பாடியில் ஆழ்துளை கிணற்றில் சுவையான குடிநீர் கிடைப்பதால் தொலை வில் இருந்து வந்து பொதுமக்கள் பிடித்துச் செல்கின்றனர்.
வேலூர்,
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து வேலூரில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கோடை வெயிலாலும், இந்தாண்டு போதிய மழை இல்லாததாலும் மாவட்டத்தின் பல்வேறு நீர் நிலைகள் வறண்டு கிடக்கிறது. இதனால் குடிநீர் பிரச்சினைகள் ஏற்பட தொடங்கி விட்டது. விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. குடிநீருக்காக மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது.
இதனால் சிலர் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சென்று விவசாய கிணறு மூலம் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றனர். தற்போது நிலத்தடி நீர்மட்டமும் அதளபாதாளத்துக்கு சென்று விட்டது. பல இடங்களில் ஆழ்துளை கிணறு மூலம் மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்து கின்றனர். அந்த தண்ணீர் உப்பு தன்மை கொண்டதாக உள்ளதால் வீடுகளில் சுத்திகரிப்பு எந்திரங்கள் மூலம் நீரை சுத்திகரித்து குடிக்கின்றனர். சுத்திகரிப்பு எந்திரங்கள் இல்லாத வீடுகளில் தண்ணீரை அப்படியே பயன்படுத்துகின்றனர். வேலூர் நகரில் பல இடங்களில ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வற்றி உள்ளதால் அவை பயன்படாமல் உள்ளது.
இந்த நிலையில் வேலூர் தொரப்பாடி பெண்கள் ஜெயில் காவலர்கள் குடியிருப்பு பகுதி அருகே ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து பெறப்படும் குடிநீர் உப்புத் தன்மை இல்லாமல் சுவையாக காணப்படுவதாதல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ெபாதுமக்கள், வியாபாரிகள் பலர் வந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
இங்குள்ள ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் நீரை நேரடியாக குடிநீராக நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்த தண்ணீரையும் மற்ற ஆழ்துளை கிணற்றில் இருந்து வரும் தண்ணீரும் ஒப்பிட்டு பார்க்கும் போது, இந்த நீர் உப்பு தன்மை இல்லாமல் சுவையாக காணப்படுகிறது.
இந்த தண்ணீரை வேலூர், சத்துவாச்சாரி, சலவன்பேட்டை, சார்பனாமேடு, சைதாப்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்து பிடித்துச் செல்கின்றனர். சிறு துரித உணவு ஓட்டல் வியாபாரிகள் பலரும் இ்ங்கு வந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர். பகலை விட இரவில் தான் இங்கு அதிக மக்கள் வந்து தண்ணீரை பிடித்துச் செல்வார்கள். வெகு தொலைவில் இருந்து மக்கள் இங்கு வருவதை காணலாம்.
இதன் அருகில் மற்றொரு ஆழ்துளை கிணறும், குடிநீர் தொட்டியும் உள்ளது. இங்கு மின் மோட்டார் பழுதடைந்து காணப்படுவதால் அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த ஆழ்துளை கிணற்று தண்ணீரும், இதேபோன்று சுவையாக இருக்கும். அந்த ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாரை சரிசெய்தால் அதிலும் மக்கள் தண்ணீரை பிடித்துச் செல்வார்கள். தண்ணீருக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.