வறண்ட பூமியில் திராட்சை சாகுபடி செய்து அசத்தும் என்ஜினீயர்

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் எப்போதும் வானம் பார்த்த பூமியாக உள்ளதால் வறட்சி மாவட்டங்களாகவே இருந்து வருகிறது.

Update: 2019-06-05 22:30 GMT

காரைக்குடி,

 சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல்வேறு பகுதியில் தற்போது நிலத்தடிநீர் மட்டம் குறைந்து சில இடங்களில் குடிநீருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல், பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவரும் நிலை இருந்து வருகிறது. இதற்கிடையே காரைக்குடி அருகே வறண்ட பூமியில் குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி திராட்சை சாகுபடியில் அசத்தி வருகிறார், என்ஜினீயர் விடுதலை அரசு (வயது 43).

காரைக்குடி–திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள பேயன்பட்டியில் தான் அவரது தோட்டம் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அவர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார். இதன்மூலம் சிலருக்கு வேலைவாய்ப்பையும் விடுதலை அரசு வழங்கி வருகிறார். தற்போது அவரது தோட்டத்தில் திராட்சைகள் நன்கு வளர்ந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. வறண்ட பூமியில் விவசாயத்தில் புரட்சி செய்து வரும் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து விடுதலை அரசு கூறியதாவது:– என்ஜினீயராக வேலை செய்வதை விட விவசாயத்தில் அதீத ஆர்வம் உண்டு. இதனால் கடந்த 2016–ம் ஆண்டு தேனியில் இருந்து திராட்சை செடிகளை வாங்கிவந்து எனக்கு சொந்தமான தோட்டத்தில் பயிரிட்டேன். பொதுவாக திராட்சை விவசாயம் செய்வதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண் நிலம் வேண்டும். இந்த மண் வளம் கொண்ட பகுதியாகவும், மலைகள் சார்ந்த பகுதியாக உள்ள தேனி, திண்டுக்கல் பகுதியில் மட்டும் விளையும் இந்த திராட்சை செடிகளை காரைக்குடி பகுதியில் காணப்படும் செம்மண் பூமியில் பயிரிட நினைத்து அந்த திராட்சை செடிகளை பயிரிட்டேன். வேளாண் அதிகாரிகளும் எனக்கு வழிகாட்டினர். அதற்கேற்றாற்போல் நல்ல பலன் கிடைத்தது. எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்தது. இதையடுத்து தொடர்ந்த கடந்த 3 ஆண்டுகளாக இங்கு இந்த திராட்சை செடிகளை பயிரிட்டு வருகிறேன்.

இந்த திராட்சை செடி பயிரிட 3 மீட்டர் இடைவெளியில் குறிப்பிட்ட அளவுள்ள குழிகளை தோண்டி அதில் இயற்கை உரங்களையிட்டு வேர் வந்த பின்னர் முற்றிய குச்சிகளை நடவு செய்ய வேண்டும். அதன் பின்னர் நீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 3வது நாள் மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை மீண்டும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதையடுத்து சரியான பருவத்தில் பயிரிட்டு இந்த செடிகளை பூச்சியில் இருந்து காத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 9 மாதம் கழித்து திராட்சை பழங்களை அறுவடை செய்யலாம்.

இந்த ஆண்டு 2¼ ஏக்கர் பரப்பளவில் திராட்சை செடிகளை நடவு செய்தேன். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் திராட்சை பழங்கள் போதிய விளைச்சல் இல்லாமல் போனது. இருப்பினும் ஓரளவு வருமானம் கிடைத்து வருகிறது. இங்கு விளைந்த திராட்சை பழங்களை வாங்குவதற்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகை தருகின்றனர். பொதுமக்களுக்கு இங்கு நேரடியாக கிலோ ரூ.100–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்