மணிமுத்தாறு கால்வாயில் மேம்பாலம் கட்ட கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை

திருவாடானை தாலுகா சூச்சனி கிராமத்தில் மணிமுத்தாறு கால்வாயில் மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-06-05 22:45 GMT

தொண்டி,

திருவாடானையில் இருந்து தோட்டாமங்கலம் செல்லும் சாலையில் சூச்சனி கிராமத்தில் ஆதியூர் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் மணிமுத்தாறு கால்வாய் உள்ளது. இதில் பொதுப்பணித்துறை சார்பில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் கட்டப்பட்டது. இப்பாலத்தின் வழியாக பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர்.

மேலும் இதில் தினமும் பல நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. தற்போது இந்த பாலம் அதன் உறுதித்தன்மையை இழந்து சேதமடைந்து உடைந்து விட்டது. இதனால் இப்பாலம் வழியாக செல்லும் மழைநீர் மற்றும் கழிவுநீர் ஒரே இடத்தில் தேங்கி தொற்றுநோய் பரப்பி வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த பாலம் முற்றிலுமாக சேதமடையும் முன்பு மேம்பாலமாக கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு வழங்கி இந்த பாலத்தை உடனடியாக மேம்பாலமாக கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் குருசாமி கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்