நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலி: கேரள வாகனங்களில் மருத்துவ குழுவினர் சோதனை

நிபா வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக, கேரள மாநில வாகனங்களில் மருத்துவக்குழுவினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-05 22:15 GMT
கம்பம்,

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள கல்லூரி மாணவர் ஒருவர், நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். மேலும் அந்த மாணவருக்கு சிகிச்சை அளித்த 2 செவிலியர்கள் உட்பட 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதன் எதிரொலியாக, கேரள எல்லையில் உள்ள தேனி மாவட்டத்திலும் சுகாதாரத் துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அதன்படி இடுக்கி மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான கம்பம்மெட்டு, லோயர்கேம்ப் சோதனைசாவடிகளில் கேரளாவில் இருந்து வருகிற வாகனங்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இதற்காக கம்பம்மெட்டு அடிவாரத்தில் பழைய போலீஸ் சோதனைச்சாவடியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மருத்துவக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் வருபவர்களிடம் காய்ச்சல் உள்ளதா? என்று சோதனை செய்யப்படுகிறது. காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கம்பம் பகுதியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் ஏராளமானோர் ஜீப்களில் வேலைக்கு செல்கின்றனர். இவர்கள் கம்பம்மெட்டு, போடிமெட்டு, குமுளி வழியாக இடுக்கி மாவட்டத்துக்கு சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் இடுக்கி மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பை கேரள மாநில சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. மேலும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சில நாட்களிலேயே அவர்கள் உயிரிழந்து விடுகின்றனர். இதனால் ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் தயக் கம் காட்டி வருகின்றனர்.

மேலும் செய்திகள்