ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை திரளான முஸ்லிம்கள் பங்கேற்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் மாவட்டத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

Update: 2019-06-05 22:30 GMT
கரூர்,

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. பள்ளிவாசல் தலைவர் நாசர் அலி தலைமை தாங்கி தொழுகையை நடத்தினார். இதில் கடைவீதியிலுள்ள சின்னபள்ளிவாசலை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். அப்போது நோன்பின் மகத்துவம் குறித்தும், ஏழை-எளியவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அல்லாவின் பேரருளை பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. வானில் பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும், பிறையை பார்த்து நோன்பை முடித்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நபிகள் நாயகம் கூறிய போதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். பின்னர் தொழுகை முடிந்து வெளியே வந்ததும் அவர்கள், ஏழை-எளியவர்களுக்கு பொருளுதவி, பண உதவி உள்ளிட்டவற்றை செய்தனர்.

பள்ளப்பட்டி ஈத்கா மைதானம்

ரம்ஜான் பண்டிகையையொட்டி காலை 10 மணிக்கு பள்ளப்பட்டி ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அரவக்குறிச்சி பெரியபள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் நடந்த தொழுகையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பின்னர் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதேபோல் வாங்கபாளையம் நூருல் இஸ்லாம் பள்ளி வாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.

அமைதி, சமத்துவம், சகோதரத்துவம் நாட்டில் மேலோங்கவும், வன்முறை இல்லாமல் அன்பின் வழியில் வாழ்வு செல்வதற்கும் தொழுகையில் பங்கேற்ற குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆகியோர் வழிபாடு செய்தனர். பள்ளிவாசல் மற்றும் தொழுகை நடந்த மைதானங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூர் முஸ்லிம்கள் பலரும் தங்களது வீடுகளில் சமைத்த உணவினை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அன்பை வெளிக்காட்டியதை காண முடிந்தது. ரம்ஜானையொட்டி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சி விற்பனை படுஜோராக நடந்தது.

ஜூம்மா பள்ளிவாசல்

லாலாப்பேட்டை ஜூம்மா பள்ளிவாசலில் ரம்ஜான் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது. இதற்கு அப்துல் லத்தீப் தலைமை தாங்கினார். செயலாளர் அமானுல்லா முன்னிலை வகித்தார். பொருளாளர் நிஜாம் வரவேற்றார். இதில் ரம்ஜான் பண்டிகை பற்றி ஜபருல்லா சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். வேலாயுதம்பாளையம் கரூர் ரோட்டில் உள்ள ஜன்னத்துல் பிர்தொஸ் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. பள்ளிவாசல் தலைவர் எம்.காதர்மைதீன் தலைமை தாங்கினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் இந்து நண்பர்களிடம் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தனர். தோட்டக்குறிச்சியில் உள்ள மதர்ஸா பள்ளிவாசலில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புகழூர் 4 ரோடு, இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் இந்து நண்பர்களிடம் ரம்ஜான் வாழ்த்துகள் தெரிவித்து இனிப்புகள் வழங்கினர். இதேபோல் தவிட்டுப்பாளையம், புஞ்சைபுகழூர், டி.என்.பி.எல். ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களிலும் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது. 

மேலும் செய்திகள்