ஈரோட்டில் பரிதாபம்: மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி சாவு

ஈரோட்டில், மின்சாரம் தாக்கிய கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-05 22:30 GMT

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி காமராஜ் வீதியை சேர்ந்தவர் சங்கர். பெயிண்டர். இவரது மனைவி திலகவதி (வயது 39). கணவன், மனைவி 2 பேரும் ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது வீட்டில் மின்விசிறி ஒரு கம்பியில் கட்டி தொங்கவிடப்பட்டு உள்ளது.

இந்த கம்பியானது வீட்டின் வெளியில் வரை நீட்டி விடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சங்கர் நேற்று காலை அந்த கம்பியில் துணி காயப்போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து சங்கரை தாக்கியது.

இதனால் அவர் கம்பியை பிடித்தபடி அங்கும், இங்கும் அசையாமல் நின்று கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அவரது மனைவி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கி 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்..

இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திலகவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சங்கருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணவரை காப்பாற்ற முயன்ற மனைவி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்