சொட்டுநீர் பாசன திட்டத்தில் சேர்ந்து விவசாயிகள் பயனடைய வேண்டும்; அதிகாரி வேண்டுகோள்
விவசாயிகள் சொட்டுநீர் பாசன திட்டத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வடிவேல் கூறியதாவது:–
எஸ்.புதூர் வட்டாரத்தில் அதிக அளவில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் இருக்கக் கூடிய தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பளவில் சாகுபடி செய்து லாபமடைய சொட்டு நீர் பாசன திட்டம் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சொட்டு நீர் மற்றும் மழைத்தூவான் அமைக்காத விவசாயிகள் தோட்டக்கலைத் துறை மூலம் மானியத்தில் புதிதாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்துள்ள விவசாயிகள், அவை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தால் மானியத்தில் பக்கவாட்டு (லேட்டர்) குழாய்களை புதுபிக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சிறு,குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் சேர்ந்த பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயி சான்றுடன் எஸ்.புதூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.