ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ஓணானை கடித்து கொன்ற பாம்பு பரபரப்பு காட்சி

ஈரோடு வ.உ.சி.பூங்காவில் ஓணானை பாம்பு கடித்து கொன்ற காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-04 23:15 GMT

ஈரோடு,

ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடுகள் செய்யும் பணி நேற்று நடந்து வந்தது. ஈத்கா மைதானத்தையொட்டிய தரைப்பகுதியில் புல்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். நேற்று நண்பகல் 12 மணி அளவில் தீவிர பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு புற்கள் அகற்றப்பட்ட பகுதியில் ஒரு ஓணான் அங்குமிங்கும் ஓடியது.

அப்போது எதிர்பாராத விதமாக மண்ணுக்குள் இருந்து சுமார் 1½ அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து அந்த ஓணானை கடித்தது. எதிர்பாராத இந்த தாக்குதலால் நிலை குலைந்த ஓணான் பாம்பை பார்த்து எதிர்த்து நின்றது. சில நிமிடங்கள் பாம்புக்கும் ஓணானுக்கும் மோதல் நடந்தது. பாம்பு சற்றும் தளராமல் ஓணானை சுற்றிக்கொண்டு மலைப்பாம்பு போல கெட்டியாக இறுக்கி பிடித்துக்கொண்டது. தன்னை விட நீளமும், பருமனும் கொண்ட ஓணானை சுற்றி வளைத்த பாம்பு ஓணானை கடித்தது.

இந்த நிகழ்வு அருகில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் பந்தல் கட்டும் பணியாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. அவர்களில் சிலர் விரைந்து வந்து ஒரு குச்சியால் பாம்பையும், ஓணானையும் பிரித்தனர். ஆனால், பாம்புக்கடிக்கு தப்பாமல் ஓணான் பரிதாபமாக செத்தது. ஓணானை கொன்ற பாம்பு மீண்டும் மண்ணுக்குள் புதைய முயற்சித்தது.

ஆனால் துப்புரவு தொழிலாளி ஒருவர் கவட்டை குச்சி ஒன்றால் பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்தார். மலைப்பாம்பு போன்ற அடையாளம் கொண்ட இந்த பாம்பு, புழுதி பாம்பு வகையை சேர்ந்தது. இது மனிதர்களை கடித்தால் வி‌ஷம் உடல் முழுவதும் பரவி தோல் நிறம் மாறும். இது மண் அதிகமாக கொட்டப்படும் இடங்களில் இருக்கும் என்றும் அந்த தொழிலாளி கூறினார்.

பாம்பு ஓணானை கடித்து கொன்ற காட்சியால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்