பரோலில் வெளிவந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுக்கு பிறகு சிக்கினார்

பரோலில் வெளிவந்து தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி 14 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கினார்.

Update: 2019-06-04 22:17 GMT
தானே,

தானே மாவட்டம் பிவண்டி படுகா பகுதியை சேர்ந்தவர் ஏக்நாத். இவர் கடந்த 1997-ம் ஆண்டு சொத்து தகராறு காரணமாக மாமாவை கொலை செய்தார். இந்த வழக்கில் தானே கோர்ட்டு அவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் கடந்த 2005-ம் ஆண்டு பரோலில் அவர் வௌியே வந்தார். அதன்பின்னர் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார்.

போலீசில் சிக்கினார்

போலீசார் அவரை வலைவீசி தேடிவந்தனர். இருப்பினும் கடந்த 14 ஆண்டுகளாக அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அவர் கல்யாண் பகுதியில் தனது அடையாளங்களை மாற்றிக்கொண்டு வேறொரு பெயரில் வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஏக்நாத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்