அரசு ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் குமரி கலெக்டர் தகவல்

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-04 22:15 GMT
நாகர்கோவில்,

அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் 2019-2020-ம் கல்வியாண்டில் புதிதாக சேர விரும்பும் மாணவ-மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிகளில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை ஆகிய இடங்களில் பள்ளி மாணவ விடுதிகளும், நாகர்கோவில், கன்னியாகுமரி, சுசீந்திரம், திங்கள்சந்தை, மார்த்தாண்டம், அருமனை ஆகிய இடங்களில் பள்ளி மாணவிகளுக்கான விடுதிகளும் செயல்பட்டு வருகிறது.

விண்ணப்பம்

அதே போன்று கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் தனித்தனியே நாகர்கோவிலில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. தொழிற்பயிற்சி மாணவர்களுக்கென நாகர்கோவில் கோணத்தில் விடுதி ஒன்றும் உள்ளது.

இவற்றில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகள் 85 பேரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் 10 பேரும், இதர வகுப்பினரில் 5 பேரும் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பள்ளி விடுதிகளுக்கு தற்பொழுது விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கல்லூரி விடுதிகளில் கல்லூரி திறக்கும் நாளிலிருந்து விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம்.

வங்கி கணக்கு

விண்ணப்ப படிவத்தில் கோரியுள்ள ஆவணங்களுடன் 3 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள், தங்களது குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றில் சுய சான்றொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் வருகிற 18-ந் தேதிக்குள், கல்லூரி மாணவர்கள் அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கு தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தகவலை குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்