ஆசிரியர் தகுதித்தேர்வு ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது

ஆசிரியர் தகுதித்தேர்வு ஆலோசனை கூட்டம் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் நடந்தது.

Update: 2019-06-04 22:45 GMT
புதுக்கோட்டை,

தமிழ்நாடு முழுவதும் வருகிற 8-ந் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1-ம், 9-ந் தேதி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-க்கும் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 47 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வையொட்டி ஆசிரியர் தகுதித்தேர்விற்காக நியமிக்கப்பட்டு உள்ள முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் ஆகியோருடன் ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை பிரகதாம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி பேசுகையில், தேர்வுக்கு முதல் நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர், துறை அலுவலருடன் இணைந்து தேர்வு மையத்தை பார்வையிட்டு தளவாட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். அறை கண்காணிப்பாளருடன் தொடர்பு கொண்டு தேர்வு பணி உள்ளதை தெரிவித்து உறுதிசெய்ய வேண்டும். காவல் துறையினரிடம் தொடர்பு கொண்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ள தெரிவிக்க வேண்டும். தேர்வு நாளன்று முதன்மைக்கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் தேர்வு மையத்திற்கு காலை 7 மணிக்குள் வருகை தரவேண்டும்.

கைக்குட்டை கொண்டு வரக்கூடாது

தேர்வு மையத்தில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருந்து வழித்தட அலுவலரிடம் இருந்து வினாத்தாள் கட்டுகள் மற்றும் ஓ.எம்.ஆர். படிவத்தினை பெற்றுக்கொண்டு இரும்பு அலமாரியில் பாதுகாப்பாக வைத்து பூட்டப்பட வேண்டும். தேர்வு மையத்தில் மொத்த மாணவர்களில் மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் எத்தனை பேர் என கணக்கிட்டு அவர்களுக்கு தரைதளத்தில் அறை ஒதுக்கப்பட வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள் காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வருகை தரவேண்டும். முதன்மை கண்காணிப்பாளர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களையும் அறை கண்காணிப்பாளர் களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அறை கண்காணிப்பாளர் செல்போனை தேர்வு அறைக்கு எடுத்துச்செல்லக்கூடாது. தேர்வர்களை சரியாக சோதனை செய்து தேர்வறைக்குள் அனுமதிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வு அறைக்குள் செல்போன், பேஜர், டிஜிட்டல் டைரி மற்ற எலக்ட்ரானிக் உபகரணங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் கைக்குட்டை கொண்டு வரக்கூடாது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டு, 2 ஊதா அல்லது 2 கருப்பு பந்துமுனை பேனாக்களை மட்டுமே கொண்டுவரவேண்டும். தேர்வர்களின் புகைப்படம் ஓ.எம்.ஆர். படிவத்தில் தெளிவாக இருக்க வேண்டும்.

சிறப்பாக நடத்த வேண்டும்

தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை தொடர்ந்து நடைபெறும். மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். 20 மாணவர்கள் மட்டுமே ஒரு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். சொல்வதை கேட்டு எழுதக்கூடிய மாணவர்களை தனி அறையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் அனைவரிடமும் இந்த மையத்தில் உறவினர்கள் யாரும் தேர்வு எழுதவில்லை என சான்று வழங்க வேண்டும். ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் பெல் அடிக்க வேண்டும். முதன்மைக்கண் காணிப்பாளர் காலை 10.30 மணியளவில் தேர்வு மையத்திற்கு வருகை புரியாத தேர்வர்களின் விவரங்களை முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டும்.

தேர்வு மையத்தின் வெளியே ஒட்டப்படும் பட்டியலில் தேர்வர்களின் பதிவெண் விவரம் மட்டுமே குறிப்பிட வேண்டும். பெயர் மற்றும் பிறந்த தேதி ஏதும் எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது. ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்துவதற்குரிய அனைத்து விதிமுறைகளையும் தவறாது பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வினை சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் குணசேகரன், ராகவன், திராவிடச்செல்வம், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், பள்ளித்துணை ஆய்வாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்