தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழியில் கட்டப்பட்டுள்ள 1,000 வீடுகளை இடிக்க திட்டம்

தஞ்சையில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அகழியில் கட்டப்பட்டுள்ள 1,000 வீடுகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-04 22:45 GMT

தஞ்சாவூர்,

உலகப் புகழ் பெற்ற பெரியகோவில் தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் உள்ளது. கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள சரசுவதிமகால், கலைக்கூடம், தர்பார் மண்டபம் ஆகியவற்றிற்கும் சுற்றுலா பயணிகள் சென்று பார்க்கின்றனர்.

இப்படி அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்லக்கூடிய தஞ்சை மாநகரை எழில் மிகுந்த நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சியை அழகுபடுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை பூங்காவை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் ஆங்காங்கே பூங்காக்கள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சை பெரியகோவில் பின்புறம் சீனிவாசபுரத்தில் இருந்து தென்கீழ் அலங்கம் வரை அகழி உள்ளது. இந்த அகழி எந்தவித பராமரிப்பும் இன்றி கிடக்கிறது. இந்த அகழியை தூர்வாரி, தண்ணீர் நிரப்பி படகு போக்குவரத்தை தொடங்கினால் சுற்றுலா பயணிகளை அதிகஅளவில் கவர முடியும் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அதன் முதல் கட்டமாக சீனிவாசபுரம், செக்கடி, வடக்குஅலங்கம், கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் அகழியின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. அகழியின் இருகரைகளிலும் வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களை எல்லாம் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவிலில் இருந்து கொடிமரத்து மூலை, தென்கீழ் அலங்கத்தில் அகழி கரையில் கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

தற்போது சீனிவாசபுரம், செக்கடி, கோட்டை மேடு, வடக்குஅலங்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்களை வெளியேற்றிவிட்டு, அந்த வீடுகளை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அகழி கரையில் குடியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எவ்வளவு பேர் வசித்து வருகின்றனர் என கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் உத்தரவின்பேரில் உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் சீனிவாசபுரம், செக்கடி ஆகிய பகுதிகளில் கணக்கெடுப்பு பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு வீடாக இவர்கள் சென்று வீட்டில் குடியிருக்கக்கூடிய கணவன், மனைவி ஆகியோரது ஆதார் அடையாள அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பெற்று கொண்டனர். இன்னும் 3 மாதங்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் என ஒவ்வொரு வீட்டினருக்கும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, அகழியை அழகு படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகழியில் தண்ணீர் நிரப்பி படகு போக்குவரத்து தொடங்கப்படும். அகழி கரையில் உள்ள வீடுகள் எல்லாம் அகற்றப்பட்டவுடன் கரையில் மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கப்படும். ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்படும். சைக்கிளில் அகழியை சுற்றி வருவதற்கான பாதை அமைக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை போல் அமைக்கப்படும். கைவினை கலைஞர்கள் தயாரிக்கக்கூடிய வீணை, தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, சிலைகள் உள்ளிட்டவைகளும் விற்பனை செய்ய சிறு, சிறு கடைகள் கட்டப்படும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தஞ்சைக்கு வந்து செல்வார்கள்.

இதற்காக தான் அகழி கரையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் இடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 1,000 வீடுகள் இடிக்கப்பட இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்காக கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது என்றனர்.

மேலும் செய்திகள்