தனித்தனி சம்பவம்; வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி, 4 பேர் மீது வழக்கு
சிவகாசியில் தனித்தனி சம்பவங்களில் 2 பேரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 34). இவர் காய்கறி கமிஷன் மண்டியில் வேலை செய்து வருகிறார். இவரிடம் சிவகாசி பராசக்திகாலனியை சேர்ந்த காளிராஜன் (50) என்பவர் மஸ்கட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் ஆட்கள் தேர்வு நிகழ்ச்சி நடப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆட்கள் தேர்வுக்கு நாகராஜன் மற்றும் சிலர் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு காளிராஜன் வரவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிச்ஆப் ஆகி இருந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட நாகராஜன் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் காளிராஜன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
இதே போல் விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் செந்தில்குமார் (38) என்பவர் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கோவில்பட்டியில் வசிக்கும் தனது அண்ணன் அருண்குமார், அண்ணி சண்முகப்ரியா, திருவனந்தபுரத்தை சேர்ந்த ரென்சு ஆகியோரிடம் ரூ.6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக்கொண்டவர்கள் செந்தில்குமாருக்கு உரிய வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பித் தராமலும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. மோசடி குறித்து செந்தில்குமார் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.