கோர்ட்டில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யா சிங் தாக்குர் எம்.பி.யின் மனு தள்ளுபடி மும்பை ஐகோர்ட்டு உத்தரவு

கோர்ட்டில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யா சிங் தாக்குர் எம்.பி.யின் மனுவை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Update: 2019-06-03 22:51 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி ஒரு மசூதி அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர், ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், பின்னர் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த நிலையில் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்குர் போபால் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றார்.

இதற்கிடையே பிரக்யா சிங் தாக்குர் உள்பட 7 பேரும் கோர்ட்டு விசாரணைக்கு ஒழுங்காக ஆஜராகவில்லை என மும்பை சிறப்பு கோர்ட்டு அதிருப்பதி தெரிவித்தது. இதனால் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

மனு தள்ளுபடி

இந்த நிலையில் பிரக்யா சிங் தாக்குர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதில், தான் நாடாளுமன்ற நடைமுறைகளை முடிக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே தனக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “நாடாளுமன்ற நடைமுறைகளை முடிப்பதற்காக வழக்கில் விலக்கு அளிக்கவேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போது முக்கிய சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டு வருகின்றனர். எனவே குற்றம்சாட்டப்பட்டவர் நேரில் ஆஜராவது அவசியம்” என கூறி பிரக்யா சிங் தாக்குரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்