மிக்சி ஜாரில் மறைத்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.56 லட்சம் தங்கம் பறிமுதல் ஆந்திர வாலிபர் கைது
தாய்லாந்து, குவைத்தில் இருந்து சென்னைக்கு ‘மிக்சி ஜார்’, உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த ரூ.56 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக ஆந்திர மாநில வாலிபரை கைது செய்தனர். மேலும் 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் பயணம் செய்த கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மனாப்(வயது 31), சம்சு(39) ஆகியோரை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. இருவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
அதில் 2 பேரும் தங்கள் உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.29 லட்சம் மதிப்புள்ள 870 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குவைத் விமானம்
அதேபோல் குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜாபீத் (33) என்பவரது உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 3 மிக்சி ஜார்கள் இருந்தன.
சந்தேகத்தின்பேரில் அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில் மிக்சி ஜார்களின் அடிப்பாகத்தில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து ஜாபீத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் இருந்து ரூ.27 லட்சம் மதிப்புள்ள 810 கிராம் தங்கத்தை கைப்பற்றினர்.
தாய்லாந்து, குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 3 பேரிடம் இருந்து ரூ.56 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 680 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவர்கள் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள்? என கைதான ஜாபீத் உள்பட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.