சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 25 பவுன் நகை திருட்டு
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் வீடு புகுந்து 25 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
சென்னை,
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, குருவப்ப செட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர்குமார் (வயது 44). பத்திரிகையாளரான இவர், நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். இவரது மனைவி நேற்று மதியம் 12 மணி அளவில் தனது மகன்கள் இருவரையும் பள்ளியில் இருந்து அழைத்துவர வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சற்று நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது.
25 பவுன் நகை திருட்டு
பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 25 பவுன் தங்க நகைகள் திருட்டு போய் இருந்தது. இது தொடர்பாக சங்கர்குமார், சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இணை கமிஷனர் ஜெயகவுரி உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஆரோக்கியம்மாள் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.
கைரேகை நிபுணர்கள் கொள்ளையர்களின் கைரேகையை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. திருட்டு சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, கொள்ளையர்கள் பற்றி போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.