சேத்தியாத்தோப்பு அருகே வாலிபர், விஷம் குடித்து தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே மதுகுடித்ததை தாய் கண்டித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குமாரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் அஜித்குமார் (வயது 20). இவர் வேலைக்கு செல்லாமல் தினசரி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அஜித்குமார் வழக்கம்போல் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
இதை பார்த்து ஆத்திரமடைந்த அவரது தாய், எதற்காக குடித்து விட்டு வருகிறாய் என கேட்டு அஜித்குமாரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அஜித்குமார் வீட்டில் யாரும் இல்லாத போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜகோபால் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.