பொய்யாதநல்லூர் மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் மிளகாய் சண்டியாகம்

பொய்யாதநல்லூரில் உள்ள மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2019-06-03 22:30 GMT
தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்டம், பொய்யாதநல்லூர் கிராமத்தில் மகா பிரத்தியங்கரா தேவி கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கோவில்களில் மிகவும் விஷேசமான கோவிலாக கருதப்படும் இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசையில் மிளகாய் சண்டியாகம் நடைபெறுவது வழக்கம். இதில் கலந்துகொள்பவர்களுக்கு புத்திர தோஷம், கண் திருஷ்டி, திருமண தடை, பில்லி சூனியம் உள்ளிட்ட சகல தோஷங்கள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி இந்த மாதத்திற்கான மிளகாய் சண்டியாகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி மகா பிரத்தியங்கரா தேவிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மிளகாய் சண்டியாகம்

தொடர்ந்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த யாகத்தில் முக்கனிகளான மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நவ தானியங்கள், சேலைகள் மற்றும் பல மூட்டை மிளகாய் யாகத்தில் கொட்டப்பட்டது. அவ்வாறு யாகத்தில் மிளகாய் கொட்டப்படும் போது எந்த ஒரு கார நெடியும் ஏற்படுவதில்லை என்பதே இக்கோவிலின் சிறப்பம்ச மாகும்.

இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்