போளூரில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை கொள்ளை
போளூரில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
போளூர்,
போளூர் டைவர்ஷன் ரோடு புதுவசந்தம் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60). இவர், லண்டனில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இதனையடுத்து அவர், போளூரில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அதில் குடியிருந்து வருகிறார். இவரது மகனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி ராஜேந்திரன் குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார். நேற்று முன்தினம் வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து ராஜேந்திரன் போளூருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் மர்ம நபர்கள் கள்ள சாவி மூலம் வீட்டின் பூட்டை திறந்து பீரோவில் இருந்த 94 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளைப் போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போளூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ஜெர்சி சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தொலைவு ஓடி நின்றது ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதனையடுத்து தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.