மணல் கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
மணல் கடத்தலை தடுக்க போலீசார் வாகன சோதனையில் ஈடுபட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் வீட்டு மனை பட்டா, கல்வி உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 500-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். குறைதீர்வு கூட்டத்திற்கு ஏராளமான மக்கள் வந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் சோதனைக்கு பின்னரே பொதுமக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
போளூர் தாலுகா வசூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வசூர் ஆற்றுப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக மணல் கொள்ளை அதிகளவில் நடந்து வருகிறது. இரவு நேரங்களில் ஆற்றில் மணலை திருடி விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாட்டு வண்டிகள் மூலம் மணலை அள்ளி அதனை ஒரு இடத்தில் குவித்து அங்கிருந்து லாரிகள் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்கின்றனர்.
தொடர்ந்து நடந்து வரும் மணல் கொள்ளையால் ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கபட்டு, விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது. மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆறுகளில் தடையை மீறி மணல் அள்ளினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
வந்தவாசி ஆயிரவைசியர் சங்கத்தினர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வந்தவாசி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயிரவைசியர்கள் வசித்து வருகின்றனர். எங்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தால் ஆயிரவைசியர் என்பதற்கு நிரூபணம் கொண்டு வாருங்கள் என்கின்றனர். நாங்கள் வாழும் தெருவின் பெயரே ஒன்றை வாடை செட்டி தெரு மற்றும் இரட்டை வாடை செட்டி தெரு ஆகும். சிலருக்கு ஆயிரவைசியர் என சாதி சான்றிதழ் வழங்கி இருக்கின்றனர். இதன் நகல்களை இதனுடன் இணைத்து உள்ளோம். எங்கள் குழந்தைகளுக்கான சாசி சான்றிதழை தடையின்றி வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஆற்று மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து உள்ளதாலும், மழை பெய்த காரணத்தினாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. வறட்சி குறித்து வருவாய்த்துறையினர், வேளாண்மைத் துறையினர், புள்ளியியல் துறையினர் கணக்கெடுக்க வேண்டும். ஜமாபந்தியில் காடு, மலை, மரம், செடி, கொடி, நஞ்சை, புஞ்சை, வாழும் தன்மை, பிறப்பு, இறப்பு, கால்நடை மேய்ச்சல் நில விபரம் போன்றவை குறித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஜமாபந்தி தலைவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மனுக்களில் உள்ள கோரிக்கை குறித்து தண்டோரோ அடித்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புருசோத்தமன், சிவா, சந்திரசேகரன், சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.6 ஆயிரத்து 400 மதிப்பிலான 3 சக்கர சைக்கிளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 ஆயிரத்து 820 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 460 மதிப்பிலான நவீன ஒளிரும் மடக்கு ஊன்று கோலும் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.3 ஆயிரத்து 800 மதிப்பிலான வாட்டர் பெட்டும் என 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 480 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கந்தசாமி வழங்கினார்.
மேலும் போளூரை சேர்ந்த ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த மாணவர் வி.அஜய்குமார் 10-ம் வகுப்பில் ஸ்ரீராமஜெயம் குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் பயின்று முழு மதிப்பெண் எடுத்தமைக்காக சிறந்த மாணவனாக தேர்வு செய்யப்பட்டு, டாக்டர் அம்பேத்கர் தேசிய மெரிட் விருதிற்கான மத்திய அரசின் சமூக நீதி மற்றும் ஊக்க உதவித்தொகையாக ரூ.40 ஆயிரம் தொகையினை வழங்கி கலெக்டர் பாராட்டினார்.
ஜமுனாமரத்தூர் தாலுகா சந்தவாசல் வழி எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெரியபையன் மகன் சின்னபாப்பா என்பவருக்கு சிறு தொழில் தொடங்குவதற்காக ரூ.15 ஆயிரம் கலெக்டர் தன் விருப்ப நிதியிலிருந்து காசோலையாக வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சமூக பாதுகாப்பு திட்டம் வில்சன்ராஜசேகர், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.