மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு
நாமக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு செல்வதை காண முடிந்தது.
நாமக்கல்,
பள்ளிக்கல்வித்துறை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என அனைத்து வகையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் நேற்று கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டன.
இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு புறப்பட்டு செல்வதை காண முடிந்தது. தமிழக அரசின் உத்தரவுபடி பள்ளி திறந்த முதல் நாளான நேற்றே மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகம் வழங்கப்பட்டது. இதில் விடுபட்ட பாடபுத்தகங்களும், சீருடை, நோட்டுகள் உள்ளிட்டவை விரைவில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான பள்ளிகளில் முதல்நாளான நேற்று இறைவணக்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பார்வதி தலைமையில் நடந்த இறைவணக்கம் நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் நன்னடத்தை உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர். நேற்று முதல்நாள் என்பதால் பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் முன்னதாக கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து விட்டு பள்ளிக்கு சென்றனர். இதனால் கோவில்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் நேற்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2019-2020-ம் கல்வியாண்டில் நேற்று புதிதாக ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இம்மாணவர்கள் எலச்சிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே இருக்கும் மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்து வரபட்டனர்.
பள்ளி வாயிலில் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கபட்டது. வட்டார கல்வி அலுவலர்கள் ராஜவேல், பாகீரதி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் கலைச்செல்வி, தலைமை ஆசிரியை தங்கமணி, ஆசிரியர் பயிற்றுநர் சுகந்தி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.