மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை: 40 மின்கம்பங்கள் உடைந்து சேதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. இதனை சீரமைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2019-06-03 22:30 GMT
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி நகரில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மரங்கள் மின் கம்பங்கள், வயர்கள் மீது விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சேதமான மின் கம்பங்கள் அகற்றிவிட்டு, புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் உடைந்த மின் கம்பங்கள் மாற்றியமைக்கும் பணியை கிருஷ்ணகிரி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் நந்தகோபால் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

மாவட்டம் முழுவதும் சூறாவாளி காற்றுடன் பெய்த மழையால் மின்கம்பங்கள் சேதமாகி உள்ளது. உடைந்த மின்கம்பங்கள் உடனடியாக மாற்றியமைக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பகுதியில் சூறாவளி காற்றில் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில், 40-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமானது. பல்வேறு இடங்களில் மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளது.

இவற்றை சீரமைக்கும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். உடைந்த கம்பங்களை மாற்றியமைக்க பணிகள் காலதாமதமின்றி நடைபெற்று வருவதால், மின்சார ஊழியர் களுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி பொறியாளர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்