மழைக் காலத்துக்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளையும் சீர்படுத்திட வேண்டும், பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

மழைக் காலத்துக்கு முன்பாக அனைத்து நீர்நிலைகளையும் சீர்படுத்திட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-06-02 22:30 GMT

சிவகங்கை,

கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:– மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை சீர்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விவசாயிகளும், அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்கள் பகுதியிலுள்ள நீர்நிலை ஆதாரங்களை சீரமைத்து மழைக்காலத்திற்கு முன்பாக தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களின் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சுமார் 30 ஜே.சி.பி. எந்திரங்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சீரமைக்கும் பணிகள் ஆங்காங்கு நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தஞ்சாக்கூர் பகுதியில் 4 கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வரும் மழைக்காலத்தில் நீர்தேக்குகின்ற அளவிற்கு சீர்செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிங்கம்புணரி, தேவகோட்டை பகுதிகளில் நீர்வரத்து கால்வாய்கள் சீர்செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் மற்ற பகுதிகளில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை பொதுமக்கள் சீர்செய்ய விரும்பினால், அந்தந்த பகுதி வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு நீர்வரத்து கால்வாய்களை மராமத்து செய்து கொள்ளலாம்.

இத்தகைய பணிகளால் வரும் மழைக்காலத்தில் மழை தண்ணீர் வீணாகாமல், கண்மாய்களில் தேக்கி வைத்துக் கொள்ள முடியும். அதன்மூலம் தேவையான குடிநீர் ஆதாரங்களை பெற்றுக் கொள்வதோடு, விவசாயப் பணிக்கு பயன்பெறும் வகையில் கண்மாய்கள் உதவிடும்.

எனவே பொதுமக்கள், அலுவலர்கள் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்பட்டு, மாவட்ட அளவில் நீர்நிலை ஆதாரங்களை உயர்த்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்