தேர்தல் செலவு குறித்து கணக்கு கேட்டதால் அ.ம.மு.க. நிர்வாகிகள் இடையே மோதல் 3 பேர் கைது

தேர்தல் செலவு குறித்து கணக்கு கேட்டதால் அ.ம.மு.க. நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-02 22:15 GMT
சரவணம்பட்டி,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சரவணம்பட்டி பகுதி செயலாளராக இருந்து வருபவர் கண்ணன். இந்த நிலையில் தேர்தல் செலவு குறித்து வார்டு செயலாளர்கள் சுரேஷ், ராஜா, பிரகாஷ் ஆகியோர் பகுதி செயலாளர் கண்ணனிடம் கணக்கு கேட்டதாக தெரிகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் பகுதி செயலாளர் கண்ணன் குறித்து அவதூறு பரப்பப்பட்டு வந்தது.

இதையடுத்து, கண்ணனின் மகன் தனது நண்பர்களான லோகநாதன், கவுசிக் ஜெரால்டு உள்ளிட்டோரை அழைத்துக்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கார் பழுது பார்க்கும் மையத்தில் இருந்த சுரேஷ், ராஜா, பிரகாஷ் ஆகியோரை பார்க்க சென்றார்.
மோதல்

அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும் இரு தரப்பினரும் கற்களை வீசி தாக்கினர். இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இதனால் அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. அப்போது அங்கு இருந்த தி.மு.க. பிரமுகர் சதீஸ்குமார் சண்டையை விலக்கி விட சென்றார். ஆனாலும் இருதரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் தி.மு.க. பிரமுகர் சதீஸ்குமார், லோகநாதன் ஆகியோருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகாயமடைந்த சதீஸ்குமார் மற்றும் லோகநாதனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் (வயது 50), கவுசிக் ஜெரால்டு (21), சுரேஷ் (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது வாகனங்களை சேதப்படுத்துதல், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் செலவு கணக்கு குறித்து அ.ம.மு.க. நிர்வாகிகளுக்குள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் சரவணம்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்