குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க வேண்டும் - பொன்முடி எம்.எல்.ஏ.

விழுப்புரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்று தி.மு.க.வினருக்கு பொன்முடி எம்.எல்.ஏ. வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-06-02 21:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை (இன்று திங்கட்கிழமை) மாவட்டம் முழுவதும் கட்சிக்கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாட வேண்டும். தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி அமோகமாக வெற்றி பெற்று 37 இடங்களை பிடித்துள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின்தான் காரணம் என்று தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பேசி வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அதற்கு தி.மு.க.வினர் தொய்வின்றி கட்சி பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து அதனை தீர்க்க தி.மு.க.வினர் உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலிராஜேந்திரன், நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, பிரபாகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவர் அணி அமைப்பாளர் வினோத், பொறியாளர் அணி அமைப்பாளர் திருசங்கு, துணை அமைப்பாளர் இளங்கோ, வளவனூர் நகர செயலாளர் ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனிடையே விழுப்புரம் காந்தி நகரை சேர்ந்த ரெயில்வே ஊழியரின் மகள் சித்ரா என்பவர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் பொன்முடி எம்.எல்.ஏ.விடம் வாழ்த்து பெற்றார். மேலும் திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் பாலம் கட்டும் பணியினால் குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டுமான பணிகளை திட்டமிட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொன்முடி எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்