இத்தலார் பகுதியில் பலத்த மழை, சேறும், சகதியுமான கோத்தகண்டி-பேலிதளா சாலை - சீரமைப்பு பணிகள் தீவிரம்

இத்தலார் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகண்டி-பேலிதளா சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதையொட்டி சாலையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-06-01 22:30 GMT
மஞ்சூர்,

மஞ்சூர் அருகே இத்தலார், புதுஹட்டி, துளிதலை, பேலிதளா, பெம்பட்டி, கோத்த கண்டி மட்டம், எமரால்டு, காந்தி கண்டி, லாரன்ஸ் ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 1.30 மணியளவில் மாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. விவசாய தோட்ட ஓரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் இத்தலார், கோத்தகண்டி பகுதிகளில் சாலைகளை அகலப்படுத்தும் பணிக்காக ஆங்காங்கே தடுப்பு சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. தடுப்பு சுவர் அமைக்க குழி தோண்டி மண் எடுக்கப்பட்டு, சாலையின் ஒருபுறம் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது மழை பெய்ததால் அந்த மண் கோத்தகண்டியில் இருந்து பேலிதளா கிராமத்துக்கு செல்லும் முதல் வளைவில் உள்ள பாலத்துக்கு அடித்து வரப்பட்டு தேங்கியது. இதனால் அந்த பகுதியில் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் கோத்தகண்டி-பேலிதளா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் பாலு தலைமையில் சாலை ஆய்வாளர் ராம்குமார் மற்றும் பணியாளர் விரைந்து வந்து, பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு தொடங்கிய பணி நேற்று காலை 11 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது. இதுபோன்று துளிதலை, புதுஹட்டி, அப்புக்கோடு ஆகிய பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் தேங்கிய சேறும், சகதியும் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

மேலும் செய்திகள்