சாக்கடை கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் அமைச்சர் சரோஜா அதிகாரிகளுக்கு உத்தரவு
ராசிபுரம் பட்டணம் ரோட்டில் ரூ.3 கோடியில் கட்டப்படும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்கவேண்டும் என அமைச்சர் சரோஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராசிபுரம்,
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி கடந்த 2 மாதங்களாக பொதுமக்களிடம் குறைகளை கேட்க முடியாத நிலை இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து, ராசிபுரம் நகராட்சி பகுதியில் நேற்று காலை சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.
அப்போது அவரிடம் சாக்கடை தூர்வாருதல், பொதுச் சுகாதாரத்திற்கு தண்ணீர் வசதி, உடைந்த தண்ணீர் குழாயை சீர்செய்தல், தெருவிளக்கு எரியச்செய்தல் போன்ற கோரிக்கைகளை பெண்கள் வைத்தனர். அவர்களது கோரிக்கையை கேட்டுக்கொண்ட அமைச்சர், உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார். சாக்கடைகளை உடனடியாக தூர்வார வேண்டும் என்றும், தண்ணீர் வசதியை செய்துதரவும் நகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா உத்தரவிட்டார். அவர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகாரிகளுடன் சென்று குடிநீர், சாக்கடை கால்வாய், பொதுச்சுகாதாரம் போன்றவற்றை ஆய்வுசெய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் பட்டணம் ரோட்டில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சாலையின் 2 பக்கமும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் கட்டுதல், கல்வெட்டு கட்டுதல், சாலை அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பட்டணம் ரோடு காந்தி சாலையில் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் பணியை பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் செய்யவேண்டும் என்றும் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை சாலையின் ஒரு பக்கம் முடித்தவுடன் அடுத்த பக்கம் சாக்கடை கால்வாய் கட்டும் பணியை தொடர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்தப் பணிகள் எவ்வளவு நாட்களுக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டபோது அவர்கள் ஒரு மாதத்திற்குள் பணியை முடித்துவிடுவோம் என்றனர். அதைக்கேட்ட அமைச்சர் பணியை சொன்ன காலத்திற்குள் தவறாமல் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சருடன் நகராட்சி ஆணையாளர் விஜயஸ்ரீ மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடன் சென்றனர்.