பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ், பட்டியல் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்
பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியல் நாளை (திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2019 மார்ச் மாதம் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு உள்பட) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்கள் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நாளை (திங்கட்கிழமை) முதல் பெற்றுக்கொள்ளலாம்.
மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும், மேல்நிலை முதலாம் ஆண்டு (600 மதிப்பெண்கள்) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான (600 மதிப்பெண்கள்) மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்விலோ, இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விலோ அல்லது இரண்டு பொதுத் தேர்வுகளிலுமோ முழுமையாக தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு, அவர்கள் இரு தேர்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து அச்சிடப்பட்ட ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும்.
இந்த மாணவர்கள் மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பின்னரே, அவர்களுக்கு இரு தேர்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.