நாகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு: ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு பரிந்துரை

இலங்கையில் சிறையில் உள்ள நாகை மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதேபோல ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசு பரிந்துரை செய்துள்ளது.

Update: 2019-06-01 22:45 GMT

ராமேசுவரம்,

நாகப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த ஏப்ரல் மாதம் 5–ந்தேதி 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்தாகவுகம் இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி நாகபட்டினம் மீனவர்கள் 18 பேருக்கும் வருகிற 14–ந்தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதேபோல கடந்த 2018–ம் ஆண்டு நவம்பர் மாதம் 28–ந்தேதி வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க சென்ற ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி மீனவர்களின் உறவினர் மத்திய–மாநில அரசுகளிடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இலங்கை அரசு நல்லெண்ண அடிப்படையில் 4 மீனவர்களை விடுதலை செய்ய மல்லாகம் நீதிமன்றத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளது. ஆனால் இந்த வழக்கு வருகிற 10–ந்தேதி விசாரணைக்கு வருவதால் அன்றைய தினம் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள் என இந்திய துணை தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்