வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை, மீட்டுத்தரக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற பெண் சித்ரவதை செய்யப்பட்டு வருவதால் அவரை மீட்டுத்தரக்கோரி அவரது கணவர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.
விழுப்புரம்,
செஞ்சி அருகே அனந்தபுரத்தை சேர்ந்த கமால் (வயது 45) என்பவர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு ஷகிலாபீ (35) என்பவருடன் திருமணமாகி 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். குடும்ப வறுமை காரணமாக எனது மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்குச்செல்வதாக கூறினார். இதற்காக நான் திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவை சேர்ந்த ஷாஹிர் என்பவரை அணுகினேன். அவர் மஸ்கட்டில் வீட்டு வேலைக்காக எனது மனைவியை அனுப்பி வைத்தார். அங்கு எனது மனைவி ஷகிலாபீ வேலைக்குச்சென்றார். அவர் 3 மாதத்தில் 2 மாதத்திற்கு மட்டும் சம்பளம் பெற்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷகிலாபீ என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தன்னை வேலை செய்யும் இடத்தில் அடித்து சித்ரவதை செய்வதாகவும், என்னை காப்பாற்றி சொந்த ஊருக்கு அழைத்துச்செல்லும்படியும் கூறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நான், ஷாஹிரை அணுகியபோது அவர் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் தரும்படி கேட்டார்.
அதற்கு நான் வறுமையில் உள்ளதாகவும், எனது மனைவியை மீட்டுத்தரும்படி கேட்டதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டார். எனவே தாங்கள் இதில் தலையிட்டு எனது மனைவியை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.