உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 509 வார்டுகளில் அமோக வெற்றி பா.ஜனதா-366, ஜனதாதளம் (எஸ்)-174 இடங்களை கைப்பற்றின
61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 509 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜனதா-366, ஜனதா தளம் (எஸ்)-174 இடங்களை கைப்பற்றியுள்ளன.
பெங்களூரு,
61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 509 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பா.ஜனதா-366, ஜனதா தளம் (எஸ்)-174 இடங்களை கைப்பற்றியுள்ளன.
கர்நாடகத்தில் 61 நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த மே மாதம் 29-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
61 நகர உள்ளாட்சி அமைப்புகள்
இந்த 61 உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 1,361 வார்டுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 360 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த 61 நகர உள்ளாட்சி அமைப்புகளில் நகர சபைகள் 8, புரசபைகள் 32, பட்டண பஞ்சாயத்துகள் 21 ஆகியவை அடங்கும்.
இந்த நிலையில் இந்த 61 உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த மே மாதம் 29-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 72 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
காங்கிரஸ் 509 வார்டுகளில் வெற்றி
மொத்தம் உள்ள 1,361 வார்டுகளில், பெங்களூரு புறநகர் மற்றும் சிவமொக்கா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான ஓட்டுகள் வருகிற 3-ந் தேதி எண்ணப் படுகிறது. மீதமுள்ள 1,221 வார்டுகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் காங்கிரஸ் 509 வார்டுகளில் அமோக வெற்றிபெற்று முதலிடம் பெற்றுள்ளது. பா.ஜனதா 366 வார்டுகளிலும், ஜனதா தளம் (எஸ்) 174 வார்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 வார்டுகளிலும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
கிராம பஞ்சாயத்து வார்டுகள்
சுயேச்சை வேட்பாளர்கள் 160 வார்டுகளிலும், பிற கட்சிகள் 7 வார்டுகளிலும் வெற்றிக்கனியை ஈட்டியுள்ளன. இந்த நகர உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 61 நகர உள்ளாட்சி அமைப்புகள் தவிர 201 கிராம பஞ்சாயத்து வார்டுகள், மாநகராட்சி, நகராட்சிகளில் 16 வார்டுகள் என மொத்தம் 217 வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. 201 கிராம பஞ்சாயத்து வார்டுகளில் 118 வார்டுகளுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.
பா.ஜனதா முன்னிலை
8 நகரசபையில் முடிவு அறிவிக்கப்பட்ட 217 வார்டுகளில் பா.ஜனதா 56 வார்டுகள், காங்கிரஸ் 90, ஜனதா தளம் (எஸ்) 38, பகுஜன் சமாஜ் 2, சுயேச்சைகள் 25, இதர 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
21 பட்டண பஞ்சாயத்துகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 290 வார்டுகளில் பா.ஜனதா 126 வார்டுகள், காங்கிரஸ் 97, ஜனதா தளம் (எஸ்) 34, சுயேச்சைகள் 33 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
32 புரசபைகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 714 இடங்களில் பா.ஜனதா 184 வார்டுகள், காங்கிரஸ் 322 வார்டுகள், ஜனதா தளம் (எஸ்) 102, பகுஜன் சமாஜ் 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 2, சுயேச்சைகள் 102, இதர 1 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
காங்கிரசுக்கு ஆறுதல்
நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் இந்த நகர உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.