அதிகாரிகள், போலீசார் மீதான புகார் குறித்து மனித உரிமை ஆணையம் விசாரணை, நாகர்கோவிலில் நடந்தது
அதிகாரிகள், போலீசார் மீதான புகார் குறித்து மனித உரிமை ஆணையம் சார்பில் நாகர்கோவிலில் விசாரணை நடந்தது.
நாகர்கோவில்,
ஷ்குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது மாநில மனித உரிமை ஆணையத்துக்கு 17 புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தன. அந்த புகார்கள் தொடர்பான விசாரணை நேற்று நாகர்கோவில் ராமவர்மபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது.
விசாரணையை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் மேற்கொண்டார். நேற்று காலையில் தொடங்கிய விசாரணை மதியம் வரை நடந்தது.
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற அக்ரி பரமசிவம் என்பவர் மனித உரிமை ஆணையத்திடம் அளித்திருந்த புகார் குறித்தும் நேற்று விசாரணை நடந்தது. அப்போது அக்ரி பரமசிவம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசாரும் நேரில் ஆஜரானார்கள். பின்னர் அக்ரி பரமசிவம் நிருபர்களிடம் கூறியதாவது:–
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுப்பது போன்ற போராட்டங்களில் ஈடுபட்டேன். காவல்துறையினர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கினார்கள். கடந்த செப்டம்பர் மாதம் போலீசார் என்னை திடீரென கைது செய்து, அடித்து துன்புறுத்தினர். பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்கள். 28 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தேன். பிறகு காவல்துறை அத்துமீறல் குறித்து மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தேன். அதன்பேரில் இன்று (நேற்று) நாகர்கோவிலில் விசாரணை நடந்தது. அப்போது காவல்துறையினரும் ஆஜரானார்கள். அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 19–ந் தேதிக்கு ஆணையம் தள்ளி வைத்துள்ளது. அப்போது இருதரப்பினரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்றார்.
இதேபோல் குமரி மாவட்டத்தில் நடந்த ஒரு ஆதாயக்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியதாகக்கூறி மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளிக்கப்பட்டு இருந்தது. மேலும், தனது குழந்தைகளை மனைவியிடம் இருந்து மீட்டுத்தர தாசில்தார், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் புகார் கூறியிருந்தார்.
இந்த புகார்கள் தொடர்பாகவும் நேற்று விசாரணை நடந்தது. அப்போது போலீசார் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதா உள்ளிட்ட அதிகாரிகளும் ஆணைய உறுப்பினர் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.