சித்தமல்லி ஊராட்சியில் காட்சி பொருளாக உள்ள குடிநீர் குழாய்கள்
சித்தமல்லி ஊராட்சியில் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து காட்சி பொருளாக உள்ளதால் தண்ணீருக்காக கிராம மக்கள் 10 கி.மீட்டர் தூரம் செல்லும் அவல நிலையில் உள்ளனர்.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே சித்தமல்லி ஊராட்சியை சேர்ந்த சோத்திரியம், வெங்குழி, பட்டவெளி, பாலகிருஷ்ணாபுரம் (மேற்கு) ஆகிய கிராமங்களில் 380-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் குழாய் உடைந்ததால் இந்த கிராமங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் குழாய்கள் காட்சி பொருளாகவே உள்ளன.
சோத்திரியம் கிராமத்தில் ஒரே ஒரு அடிபம்பு தான் உள்ளது. இந்த அடிபம்பு தண்ணீரை தான் கடந்த 3 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த அடிபம்பில் உப்பு தண்ணீராக வருகிறது.
இந்த அடிபம்பிலும் வறட்சி காலங்களில் போதுமான தண்ணீர் வருவதில்லை. இப்போது ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று பாமணி ஆற்றில் தேங்கி கிடக்கும் சுகாதாரமற்ற தண்ணீரை எடுத்து சென்று இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பகுதிக்கு தண்ணீர் எடுக்க செல்லும் பாதை குண்டும், குழியுமாக இருப்பதால் கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் தண்ணீருக்காக 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள முத்துப்பேட்டைக்கும் அல்லது 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள கும்மட்டிதிடலுக்கும் கிராம மக்கள் செல்லும் அவல நிலையில் உள்ளனர். சிலர் ஒரு குடம் தண்ணீர் ரூ.22 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
எனவே, மாவட்ட கலெக்டர், சோத்திரியம் கிராமத்தை நேரடியாக பார்வையிட்டு உடைந்து கிடக்கும் கூட்டு குடிநீர் திட்ட குழாயை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.