3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இ-சேவை மைய ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-31 22:45 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகா அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகம் மற்றும் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் என மொத்தம் 8 இ-சேவை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் வருமானத்துறை சாதி, இறப்பு, இருப்பிடம், பிறப்பு, வருமானம் போன்ற சான்றிதழ்கள், ஆதார் அட்டை பதிவு செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், ரே‌‌ஷன் கார்டு உள்ளிட்ட சேவைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் நேரடியாக இ-சேவை மையங்களுக்கு சென்று இணையதளத்தில் ஆன்லைன் மூலம் திருத்தம், பெயர் மாற்றம் போன்றவற்றை மேற்கொண்டு பயனடைந்து வருகிறார்கள்.

நீலகிரியில் இ-சேவை மையங்களில் மொத்தம் 24 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக தற்காலிக ஊழியர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி மத்திய பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை நீலகிரி மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் ஆல்தொரை தொடங்கி வைத்து பேசினார். இதனால் நீலகிரி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் சேவைகள் பாதிக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டம் குறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை கூறியதாவது:-

இ-சேவை மையங்களில் தற்காலிக ஊழியர்கள் கடந்த 4½ ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் ரூ.7675 வழங்கப்படுகிறது. இதற்கிடையே கடந்த 7 மாதங்களாக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து முன்னறிவிப்பு இன்றி மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் உரிய காரணம் தெரிவிக்க மறுக்கின்றனர். குறைந்தபட்ச சம்பளத்தில் பிடித்தம் செய்வதால், அவர்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் உள்ளனர்.

சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இயங்கும் இ-சேவை மையங்களை மூடிவிட்டு, தனியாருக்கு விட தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அரசு கேபிள் டி.வி. நிர்வாகம் தற்காலிக ஊழியர்களின் ஊதியதில் பி.எப். மற்றும் இ.எஸ்.ஐ. என பணம் பிடித்தம் செய்கிறது. ஆனால், அந்த பலன்களை திரும்ப பெற முடியாத நிலை உள்ளது. கேரள மாநிலத்தில் இ-சேவை ஊழியர்களுக்கு மாதம் ரூ.24 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தான் குறைவான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மின் துண்டிப்பு, இணைய சேவை பழுது போன்ற காரணங்களால் சேவைகள் பாதிக்கப்படு கின்றன.

இதனால் இ-சேவை மற்றும் ஆதார் சேவை மையங்களை மூடக்கூடாது, தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பொதுமக்களின் சேவை என்பதை கருத்தில் கொண்டு, மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்