காற்றுக்காக குடும்பத்துடன் மாடியில் தூங்கியபோது வீடு புகுந்து 13 பவுன் நகை திருட்டு

காற்றுக்காக குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கியபோது நள்ளிரவில் வீடு புகுந்த மர்மநபர்கள் 13 பவுன் நகைகளை திருடிச்சென்று விட்டனர்.

Update: 2019-05-31 00:20 GMT
செங்குன்றம்,

சென்னை மாதவரம் பால்பண்ணை 3-வது தெருவை சேர்ந்தவர் முகுந்த ராமானுஜம் (வயது 46). அதே பகுதியில் மணல், செங்கல், ஜல்லி வினியோகம் செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வீட்டில் புழுக்கமாக இருந்ததால் கதவை சும்மா சாத்திவிட்டு குடும்பத்துடன் வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நள்ளிரவில் அவரது வீட்டின் கதவை திறந்து நைசாக உள்ளே புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 13 பவுன் நகை, ரூ.1,300 ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

பின்னர் மர்மநபர்கள், இவரது வீட்டின் அருகே உள்ள மணி என்பவருக்கு சொந்தமான பால் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.12 ஆயிரத்தையும் திருடிச்சென்றனர்.

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார்.

திருவொற்றியூர் காலடிப்பேட்டை துலுக்காணத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின்(48). இவர், திருவொற்றியூர் தேரடியில் துணிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக பால்கனி கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கினார்.

அப்போது மர்மநபர்கள் நைசாக பால்கனி வழியாக வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றுவிட்டனர். காலையில் எழுந்து பார்த்த ஸ்டாலின், வீட்டில் திருட்டுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்