மானாமதுரை ரெயில் நிலையத்தில், தானியங்கி பயணச்சீட்டு எந்திரம் செயல்பட தொடங்கியது ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அதிகாரிகள் நடவடிக்கை

மானாமதுரை ரெயில் நிலையத்தில் பழுதாகி கிடந்த தானியங்கி பயணச்சீட்டு எந்திரம், ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் மீண்டும் செயல்பட தொடங்கியது.

Update: 2019-05-30 22:15 GMT
மானாமதுரை, 

மானாமதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக தானியங்கி பயணச்சீட்டு எந்திரம் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செயல்படாமல் இருந்து வந்தது. மானாமதுரை ரெயில் நிலைத்தில் இருந்து தினமும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ரெயில் சேவை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக காலை நேரத்தில் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இருந்து மதுரை, ராமேசுவரம், காரைக்குடி ஆகிய இடங்களுக்கு அதிக அளவில் பயணிகள் சென்று வருகின்றனர்.

அதில் ரெயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பயணிகள் டிக்கெட் கவுண்ட்டர் முன்பு முண்டியடித்து கொண்டு டிக்கெட் எடுப்பதால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வந்தது. இதனால் ரெயில்வே ஊழியர்களும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இந்த பிரச்சினையால் சிலர் டிக்கெட் எடுக்கமால் செல்வதும், ஓடிப்போய் ரெயிலை பிடிக்க முயல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தன. இதை கருத்தில் கொண்டு ரெயில்வே நிர்வாகம் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் எந்திரத்தை மானாமதுரை ரெயில் நிலையத்தில் அமைத்தது.

இந்த எந்திரம் அமைக்கப்பட்ட நாளில் இருந்து சரிவர செயல்படவில்லை. பழுது சரி செய்யப்பட்டாலும், மீண்டும் செயல்படாமல் இருந்தது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகத்திற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகவல் தெரிவிக்காததால், எந்திரம் பழுதான நிலையிலேயே இருந்து வந்தது. மேலும் இந்த எந்திரம் டிக்கெட் கவுண்ட்டர் முன்பு காட்சி பொருளாக இருந்து வந்தது.

இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து மதுரையில் உள்ள ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிய வரவும், தானியங்கி எந்திரத்தை சரி செய்ய நடவடிக்கை எடுத்து, அதற்காக ரெயில்வேயில் ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரை நியமித்து தானியங்கி எந்திரம் மூலம் தற்போது டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பயணிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணச்சீட்டு பெற்று செல்கின்றனர். தகுந்த நேரத்தில் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கும் பயணிகள் நன்றி தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்