வாணியம்பாடி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி வாலிபர் சாவு

வாணியம்பாடி அருகே ஆட்டோ மீது பஸ் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-30 22:30 GMT
வாணியம்பாடி, 

வாணியம்பாடியை அடுத்த சிக்கணாங்குப்பம் ராசன் வட்டத்தை சேர்ந்தவர் பரத் (வயது 23). நேற்று முன்தினம் மாலை பூமரம் பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பரத்தை வரழைத்து, ஆட்டோவில் டிரைவர் உள்பட 3 பேர் அங்கிருந்து ஆம்பூருக்கு சென்றனர்.

கிரிசமுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோ சென்றபோது பின்னால் வந்த கர்நாடக அரசு பஸ் திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து பரத் படுகாயம் அடைந்தார். ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பர் உயிர் தப்பினர். படுகாயம் அடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவரது நண்பரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கர்நாடக பஸ் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பரத்தின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், கூட்ரோட்டில் ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தியும் பூமரம் கூட்ரோடு சாலையில் அப்பகுதி மக்கள் திடீரென சாலையில் கற்களை வைத்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பலூர் போலீசார் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்