தேனியில், 1½ ஆண்டாக திறக்கப்படாததால் , புதர்மண்டிக் கிடக்கும் எம்.எல்.ஏ. அலுவலகம்
தேனியில் 1½ ஆண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் உள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகம் புதர்மண்டிக் கிடக்கிறது.
தேனி,
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி கவர்னரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த தங்கதமிழ்செல்வன், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் கதிர்காமு ஆகியோரும் அடங்குவர். தகுதிநீக்கத்தை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகள் காலியாகின.
தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் இந்த எம்.எல்.ஏ. அலுவலகங்கள் பூட்டப்பட்டன. அதன்படி, பெரியகுளம் எம்.எல்.ஏ. அலுவலகம் தேனியில் ரெயில்வே நிலையம் செல்லும் சாலையில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் கடந்த 1½ ஆண்டுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. எம்.எல்.ஏ. இல்லாத நிலையில் இடைப்பட்ட காலத்தில் அடிப்படை பராமரிப்பு பணிகள் கூட மேற்கொள்ளப்படவில்லை.
எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாததால் இந்த அலுவலகம் தற்போது புதர்மண்டிக் கிடக்கிறது. அத்துடன் புதர்மண்டிய இந்த கட்டிட வளாகத்தில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடைய பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ந்தேதி நடந்தது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆண்டிப்பட்டியில் தி.மு.க. வேட்பாளர் மகாராஜனும், பெரியகுளத்தில் தி.மு.க. வேட்பாளர் சரவணக்குமாரும் வெற்றி பெற்றுள்ளனர். இருவரும் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
பதவி ஏற்றுக் கொண்டதை தொடர்ந்து அவர்கள் தங்களின் அலுவலகங்களுக்கு விரைவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரத்தில் தேனியில் உள்ள பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் புதர்மண்டிக் கிடப்பதால் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.