இந்த ஆண்டு கோடை சீசனில் இதுவரை பைக்காரா படகு இல்லத்துக்கு 1½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை

இந்த ஆண்டு கோடை சீசனில் இதுவரை பைக்காரா படகு இல்லத்துக்கு 1½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்து உள்ளனர்.

Update: 2019-05-30 22:30 GMT
ஊட்டி,

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே பைக்காரா அணை உள்ளது. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பைக்காரா அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பைக்காரா படகு இல்லம் சுற்றுலா தலமாக செயல்பட்டு வருகிறது.

கோடை சீசனையொட்டி கோடை விடுமுறையை களிக்கவும், குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும் பைக்காரா படகு இல்லத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

அணை பகுதிகளை சுற்றிலும் உள்ள மலை மேடுகள் தீவுகள் போன்று காட்சி அளிக்கிறது. அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அங்கு சுற்றுலா பயணிகளுக்காக 20 மோட்டார் படகுகள் மற்றும் 5 அதிவேக மோட்டார் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. மோட்டார் படகில் சவாரி செய்ய 8 பேருக்கு ரூ.815, 10 பேருக்கு ரூ.935, 15 பேருக்கு ரூ.ஆயிரத்து 310, அதிவேக மோட்டார் படகில் சவாரி மேற்கொள்ள 2 அல்லது 3 பேருக்கு ரூ.840 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உயிர்பாதுகாப்பு கவசம்(லைப் ஜாக்கெட்) அணிந்த பின்னரே சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதிவேக மோட்டார் படகில் சவாரி செய்யும் போது, தண்ணீரில் வேகமாக குதித்து எழுந்து பயணம் செய்வது போல் இருக்கும். மேலும் தண்ணீரை கிழித்தபடி வேகமாக செல்வதால், சுற்றுலா பயணிகளுக்கு திகில் அனுபவம் கிடைக்கிறது. அவ்வாறு பயணம் செய்யும் போது, அணையில் தண்ணீர் வேகமாக விலகி செல்வதையும், வலை போட்டு மீன் பிடிக்கும் காட்சியையும் காணலாம். அதிர்‌‌ஷ்டம் இருந்தால் காட்டெருமை, கடமான் போன்ற வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதை பார்க்க வாய்ப்பு உள்ளது.

பைக்காரா அணையின் மொத்த கொள்ளளவான 110 அடியில், 60 அடிக்கு தண்ணீர் உள்ளது.

கோடை சீசனை முன்னிட்டு பைக்காரா படகு இல்லத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் படகு சவாரி செய்ய படிக்கட்டுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அங்கு சுற்றுலா பயணிகளின் குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்ளன. மேலும் காட்சி மேடையில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தவாறு அணையின் இயற்கை அழகு மற்றும் படகு சவாரியை கண்டு ரசிக்கிறார்கள்.

இந்த ஆண்டு கோடை சீசனையொட்டி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இதுவரை சுமார் 1½ லட்சம் சுற்றுலா பயணிகள் பைக்காரா படகு இல்லத்துக்கு வருகை தந்து உள்ளதாக படகு இல்ல மேலாளர் வேலாயுதன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்