ஈரோடு ஒன்றியத்தில் பள்ளிக்கூடங்களுக்கு புத்தகங்கள் வினியோகம்
ஈரோடு ஒன்றியத்தில் பள்ளிக்கூடங்களுக்கான புத்தகங்கள் நேற்று வினியோகிக்கப்பட்டன.
ஈரோடு,
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின்னர் வருகிற ஜூன் 3-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன.
பள்ளிக்கூடங்கள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு ஒன்றியத்துக்கு உள்பட்ட 98 பள்ளிக்கூடங்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி நடந்தது. ஈரோடு காவிரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் உள்ள புத்தக கிடங்கில் இருந்து புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டன. ஈரோடு வட்டார கல்வி அதிகாரிகள் தலைமையில் இந்த பணி நடந்தது.
பள்ளிக்கூடங்கள் சார்பில் தலைமை ஆசிரியர்கள் அல்லது பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் வந்து தங்கள் பள்ளிக்கூடத்துக்கு தேவையான புத்தகங்களை பெற்றுக்கொண்டனர். நேற்று 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு, 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கான புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன.
மீதம் உள்ள வகுப்புகளுக்கான புத்தகங்கள் பள்ளிக்கூடம் திறந்து ஒரு வாரத்துக்குள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஒரு வேளை பாடப்புத்தகங்கள் வருவதற்கு கால தாமதம் ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் இணைய தளத்தில் இருந்து பாடப்புத்தகங்களை தரவிறக்கம் செய்து பாடங்கள் நடத்த ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.
புத்தக கிடங்கில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகங்கள் அந்தந்த பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. இந்த புத்தகங்கள் வகுப்புகள் தொடங்கியதும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளன.