திருவெறும்பூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருவெறும்பூர் அருகே சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-05-30 23:00 GMT
பொன்மலைப்பட்டி,

கரூரை சேர்ந்தவர் சரவணன். (வயது 29). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் பெங்களூருவில் இருந்து மாதுளம் பழங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கணேசபுரம் பகுதியில் திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது, ரவுண்டானா பகுதியில் வந்த போது லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ஒரு பக்கமாக சரிந்த லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி டிரைவர் சரவணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த பழ பெட்டிகள் கீழே விழுந்ததால், மாதுளம் பழங்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கிரேன் மூலம் லாரி சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் வேறு வாகனங்களில் தொழிலாளர்கள் மூலம் மாதுளம் பழ பெட்டிகள் பட்டுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து பெல்போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெல் ரவுண்டானா அளவுக்கு அதிகமாக பெரியதாக இருப்பதால், அடிக்கடி இந்த பகுதியில் சாலை விபத்துகள் நடைபெறுகிறது. எனவே ரவுண்டானாவின் அளவை குறைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்