மீன்சுருட்டி அருகே விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

மீன்சுருட்டி அருகே விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-30 23:00 GMT
மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர்கோவில் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க மாமன்னன் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்றழைக்கப்படும் பொன்னேரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் பொன்னேரியை தூர்வாரக்கோரியும், வருணபகவானிடம் மழை வேண்டியும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் நேற்று திடீரென ஏரிக்குள் இறங்கினர். பின்னர் தலையில் மண் சட்டியை ஏந்தி ஏரியை தூர்வார வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். திருச்சி- சிதம்பரம் சாலை பணிக்கு ஏரி மண்ணை பயன்படுத்த வேண்டும். வரத்து வாய்க்காலை செப்பனிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டு, மழை வேண்டி வைக்கோலால் தயார் செய்த கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து, கொடும்பாவி எரிக்க அனுமதி இல்லை என்றனர்.

பரபரப்பு

இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் விவசாயிகள் கொடும்பாவியை எரித்தபோது, அதை போலீசார் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஒருவழியாக எரிக்கப்பட்ட கொடும்பாவியை ஏரியில் தேங்கி கிடந்த தண்ணீரில் கரைத்தனர். பிறகு தலையில் சுமந்த மண் சட்டியையும் உடைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற விவசாயிகள் அங்கு தாசில்தாரை சந்தித்து மனு அளித்துவிட்டு சென்றனர். 

மேலும் செய்திகள்