மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை 294 மி.மீட்டர் பெய்ய வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 294 மி.மீட்டர் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2019-05-30 21:45 GMT
நாமக்கல், 

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கால்நடை தீவன பகுப்பாய்வு மற்றும் தர உறுதி ஆய்வகத்தில் இயங்கி வரும் வேளாண் வானிலை ஆலோசனை மையத்தில் தென்மேற்கு பருவமழை குறித்த கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கல்லூரி முதல்வர் மோகன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நடராஜன் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற தகவல்களை அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு இந்திய அளவில் தென்மேற்கு பருவமழை 96 சதவீதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையானது நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் மாதம் 6-ந் தேதி தொடங்கலாம் எனவும், மொத்த மழையளவு 294 மி.மீட்டராக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் அதிகபட்ச வெப்பநிலை முறையே 95.18, 93.92, 93.02 மற்றும் 93.02 டிகிரியாகவும் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 75 டிகிரியாகவும் இருக்கும்.

காற்றின் வேகம் அதிகரித்து சராசரியாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் மணிக்கு முறையே 9.2, 9.6, 11 மற்றும் 7 கி.மீ என்ற அளவில் வீசக்கூடும். வேளாண் வானிலை ஆலோசனை மையத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தின் 15 வட்டாரங்களை சேர்ந்த 52 விவசாயிகளுக்கு மழைமானி வழங்கி மழையளவை பதிவிட்டு, அதன் மூலமாக அவ்விடங்களுக்கான விவசாய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து கோழியின நோய் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு ஆய்வகத்தின் தலைவர் கோபாலகிரு‌‌ஷ்ண மூர்த்தி பேசினார். அப்போது அவர், கோழிகளில் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை குடல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

இதேபோல் கல்லூரி பேராசிரியர் பொன்னுத்துரை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்தும், பேராசிரியர் எசேக்கியல் நெப்போலியன் கால்நடை மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்தும், பேராசிரியர் செல்வராஜ் கால்நடைகளின் இனபெருக்கம் குறித்தும் விளக்கம் அளித்தனர். இதில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்