ஏரல் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது

ஏரல் அருகே திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-05-30 21:45 GMT
ஏரல், 

ஏரல் அருகே திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வாலிபரை விடுதலை செய்யக்கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேமரா திருட்டு

ஏரல் அருகே உள்ள அம்மாள்தோப்பை சேர்ந்தவர் குணசிங். இவரின் மகன் சரவணன். இவர் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் வாங்கி, விற்பனை செய்து வருகிறார். இவரின் கடை முன்பு 2 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த கேமராக்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சிவனேசன் (வயது25), செல்வம் மகன் அஜித் (22) ஆகியோரை கைது செய்தனர்.

சாலை மறியல்

இதில் கைதான அஜித்தை விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் இளைஞர் அணி மாவட்ட தலைவர் விடுதலை செழியன் தலைமையில் பலர் அம்மாள்தோப்பு ரோட்டில் சாலை மறியல் செய்தனர். இதனையறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து போகுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் மறியலை கைவிட மறுத்தனர். இதனையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து ஏரல் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்